முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வரும் 26ம் தேதி துவக்கம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளின் கீழ் வரும் 26ம் தேதி துவங்குகிறது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வரும் 26ம் தேதி முதல் செப்., 10ம் தேதி வரை நடக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளின் கீழ் ஆண், பெண் இரு பாலருக்கும் மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி மைதானம், தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளி, தியாதுருகம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. கூடைபந்து, கபடி, வாலிபால், கோ கோ, கால்பந்து, தடகளம், கிரிக்கெட், சிலம்பம், நீச்சல், இறகுபந்து, மேசைப்பந்து, கேரம், சதுரங்கம், ஹாக்கி, பேட்மிட்டன், எறிப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.