உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி... தொய்வு ; சுகாதார மைய கட்டடத்தால் தொடரும் சிக்கல்

சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி... தொய்வு ; சுகாதார மைய கட்டடத்தால் தொடரும் சிக்கல்

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பஸ் நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் சுகாதார மைய கட்டடம் காலி செய்து கொடுக்காமல் இருப்பதால் பணிகள் துவங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சின்னசேலத்தில் ரயில்வே ஸ்டேஷன், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தாலுகா, பேரூராட்சி, பி.டி.ஓ., உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளன. கூகையூர், நைனார்பாளையம், வி.மாமந்துார், குரால், நாககுப்பம், கல்லாநத்தம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக தினமும் சின்னசேலத்திற்கு வந்து செல்கின்றனர். சின்னசேலம் பஸ் ஸ்டேண்டில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.சேலம் -- சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் சின்னசேலம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி செல்கின்றன. குறிப்பாக ரயில்வே ஸ்டேஷன் இருப்பதால் அதிகளவு பயணிகள் வரும் பகுதியாக உள்ள சின்னசேலத்தில் பஸ் ஸ்டேண்ட் மிக குறுகிய அளவிலேயே உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 5 பஸ்கள் கூட நிற்க முடியாத நிலையில் இருப்பதால், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் சாலையோரத்திலேயே நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது.பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் முறையாக அமரும் வகையில் போதிய இடவசதி இல்லை. இதனால் சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட்டை விரிவுபடுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளுக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் போலீஸ் ஸ்டேஷன் எதிரே பயன்படாத நிலையில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை அகற்ற முடிவு செய்தனர். மேலும், தற்போதைய பஸ் ஸ்டாண்ட் உள்ள ஒரு பகுதி வணிக வளாக கடைகளை அகற்றி, பஸ் ஸ்டாண்ட்டை விரிவுபடுத்த முடிவு செய்தனர்.அதன்படி, ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தின் ஒரு பகுதி மட்டும் இடித்து அகற்றப்பட்ட நிலையில், மற்றொரு கட்டடம் அகற்றப்படாமல் உள்ளது.இதற்கிடையே பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் சுகாதார மைய கட்டடம் காலி செய்து கொடுக்காமல் இருப்பதால் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குறுகிய அளவிலான பஸ் ஸ்டாண்ட்டால் பயணிகள் மட்டுமின்றி, பஸ் டிரைவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட்டில் நிற்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.எனவே, சின்னசேலம் பஸ்ஸ்டாண்ட்டை விரிவாக்கப் பணிகளை உடனடியாக மேற்கொள்வதற்கு கலெக்டர் பிரசாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ