உயர்வுக்கு படி நிகழ்ச்சி கலெக்டர் துவக்கி வைப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் 'உயர்வுக்கு படி' நிகழ்ச்சி நடந்தது. இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசின் நலத்திட்டங்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள், வங்கி நிதியுதவி மற்றும் உயர்கல்விக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், பிளஸ் 2 முடித்து கல்லுாரியில் சேராத மாணவர்களுக்கு வழிகாட்டிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் பேசுகையில், 'மாணவர்கள் தேர்வு செய்யும் கல்லுாரியின் கல்வித் தரம், அரசு அங்கீகாரம், வசதிகள் மற்றும் தேர்வு செய்யும் படிப்புக்கான வேலை வாய்ப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து தேர்ந்தெடுக்க வேண்டும். பல்வேறு துறைகளின் சார்பில் வழங்கப்படும் அரசின் கல்வி உதவித் தொகைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேராத மாணவர்கள் ஏதாவது ஒரு உயர்படிப்பை தேர்வு செய்து படிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும்' என்றார். உயர்படிப்பு தொடர்பாக ஏதாவது கேள்விகள் இருந்தால், கலெக்டர் அலுவலக கட்டுபாட்டு அறை எண் 81223 09830 மற்றும் 04151-228802 ஆகிய எண்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், சி.இ.ஓ., கார்த்திகா, அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.