| ADDED : நவ 21, 2025 05:27 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்த மாவட்ட நிலை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை, தோட்டக்கலை துறை, கால்நடை துறை, வருவாய் துறை, சுகாதார துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு நடைபெறவுள்ள அரசு விழாவில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு துறையிலும் பயனாளிகளின் பட்டியல்கள் தயார் செய்து வழங்கிட வேண்டும். ஒவ்வொரு துறையிலும் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தயார் நிலையில் உள்ள புதிய கட்டடங்கள் விபரம், அடிக்கல் நாட்டப்பட உள்ள கட்டடங்கள் விவரம் ஆகியவை விரிவாக பட்டியல் தயார் செய்து வழங்கிட வேண்டும். மேலும் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் கட்டடங்களை தரமாகவும் விரைந்து முடித்து பெதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். வளர்ச்சி திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்மக உதவியாளர்(பொது) தனலட்சமி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.