தாட்கோ திட்டத்தில் திருநங்கைக்கு கலெக்டர் கடனுதவி ஆணை வழங்கல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தாட்கோ திட்டத்தின் கீழ் திருநங்கைக்கு சுய தொழிலுக்கான கடனுதவி தொகைக்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட சமூக அலுவலகம் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மற்றும் எச்.ஐ.வி., பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில் திருநங்கைகள் பலர் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் பிரதான் மந்திரி அனுஷிக் ஜாதி அபியூதாய் யோஜனா திட்டத்தின் கீழ் அனுஷா என்ற திருநங்கைக்கு கறவை மாடு வாங்கி தொழில் முனைவோராகும் பொருட்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கடனுதவி தொகைக்கான ஆணை வழங்கினார். கடனுதவி தொகையினை முறையாக பயன்படுத்தி உயர்ந்து வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும். மேலும் திருநங்கைகளுக்காக நடைபெறும் பல்வேறு சிறப்பு முகாம்களை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பயிற்சி கலெக்டர் சுபதர்ஷினி, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா ஆகியோர் உடனிருந்தனர்.