மேலும் செய்திகள்
ஊராட்சிகளில் வளர்ச்சி பணி கலெக்டர் நேரில் ஆய்வு
11-Oct-2024
திருக்கோவிலுார்: முகையூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணி திட்டங்களை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இருதயபுரம் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ. 24.60 லட்சம் மதிப்பில் புதிய ஏரி அமைக்கும் பணிகளை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.தொடர்ந்து காரணை பெரிச்சானுார் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 4.8 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டுமான பணி, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடு கட்டும் பணி, வீரசோழபுரம் ஊராட்சியில் ரூ. 1.46 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டும் பணி, 15 வது நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ. 42.65 லட்சம் மதிப்பில் ஊராட்சி செயலக கட்டடம் கட்டும் பணியை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அரகண்டநல்லுார் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் விதமாக பேரூராட்சி பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ள விவரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார். அரண்டநல்லுார் பேரூராட்சி சேர்மன் அன்பு, முகையூர் பி.டி.ஓ., ஜகன்நாதன், சண்முகம் உதவி பொறியாளர் குணசேகரன், பேரூராட்சி செயல் அலுவலர் முரளி உள்ளிட்ட அலுவலர்கள் இருந்தனர்.
11-Oct-2024