மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கலெக்டர் பிரசாந்த் அட்வைஸ்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவரது செய்திக்குறிப்பு : தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. புதிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்குதல், ஒன்று முதல் முதுநிலை வரை படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை. சுய தொழில் செய்வதற்கு மானியத்துடன் வங்கி கடன் உதவி, பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின் மூலம் மாதம் தோறும் ரூ.2,000 வழங்கப்படுகிறது. படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளை கவனித்து வரும் பெற்றோருக்கு கூடுதல் உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. திருமண உதவி திட்டத்தின் மூலம் ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி தங்களது தினசரி தேவைகளை பூர்த்தி செய்திட உதவி உபகரணங்களாக 3 சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, செயற்கைக்கால் காளிபார் ஊன்றுகோல், பார்வையற்றவர்களுக்கான கருப்பு கண்ணாடி, மடக்கு குச்சி, கல்வி பயில்பவர்களுக்கு பிரெய்லி ரீடர் வாசிக்கும் கருவி, கைக்கடிகாரம், எழுத்துக்களை பெரிதாக காட்டும் உருப் பெருக்கி. முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, தையல் இயந்திரம், சுய தொழில் புரிவோர், பணிபுரிவோர், கல்வி பயில்பவர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர் போன்ற உபகரணங்கள் தமிழக அரசால் தொடர்ந்து வழங்கப்படுகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் . இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.