ஆட்சிமொழி சட்ட வாரம் 18ம் தேதி துவங்குகிறது கலெக்டர் பிரசாந்த் தகவல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஏழு நாட்கள் கொண்டாடப்பட உள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை நினைவு கூறும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் 7 நாள்கள் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் டிச., 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை 7 நாட்கள் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது.18ம் தேதி காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடிகிறது. அரசுப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணர்கள் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். டிச., 19ல் கல்லுாரி மாணவர்கள் பட்டிமன்றம், 20ல் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்திட வணிக நிறுவன அமைப்பு கூட்டம் நடக்கிறது. 23, 24, 26 ஆகிய மூன்று நாட்கள் அரசு பணியாளர்களுக்கான ஆட்சிமொழி ஆய்வு, குறை களைவு நடவடிக்கை, மொழிப்பயிற்சி, மொழி பெயர்ப்பு, கலைச் சொல்லாக்கம், கணினித் தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், தமிழில் வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகள் ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லுாரி கலையரங்கில் நடக்கிறது.இறுதி நாளான 27ம் தேதி அனைத்து ஒன்றியம், வட்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில் விளம்பரப் பதாகைகள் ஏந்தி அரசுப் பணியாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆட்சிமொழித் திட்ட விளக்க கூட்டம் நடக்கிறது என, தெரிவித்துள்ளார்.