உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குழந்தை திருமணம் செய்தால் போக்சோ சட்டத்தில் தண்டனை; கலெக்டர் பிரசாந்த் எச்சரிக்கை

குழந்தை திருமணம் செய்தால் போக்சோ சட்டத்தில் தண்டனை; கலெக்டர் பிரசாந்த் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வகுப்பு நடந்தது. கருத்தரங்கை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்து பேசியதாவது; பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் இடையே பாலின சமத்துவத்தை உருவாக்க வேண்டும். பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களின் தனிப்பட்ட திறமையை வளர்ப்பதற்கான திறன் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கு 'போஷ்' சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்ட விதிகள் அமைக்கப்பட்டுள்ளது. 'போஷ்' சட்டத்தின்கீழ் பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கு என 10க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட புகார் குழு அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 'போஷ்' சட்டத்தின்கீழ் 90 சதவீதம் அளவில் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை திருமணம் முழுமையாக ஒழித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் செய்பவர்களுக்கும், நடத்தி வைப்பவர்களுக்கும் சட்டத்தின்படி கடுமையான தண்டனை வழங்கப்படும். குழந்தை நலனை பாதுகாக்க 'போக்சோ' சட்டம் உள்ளது. குழந்தை திருமணம் செய்யும் ஆண்களுக்கு 'போக்சோ' சட்டத்தின்படி தண்டனை கொடுக்கப்படும். எனவே மாணவர்களுடைய எண்ணம் எப்பொழுதும் கல்வி கற்று உயர்கல்வி பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதாக இருக்க வேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி