உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்தால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை;

சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்தால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை;

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்தால் போக்சோ வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; குழந்தை திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பம் போன்ற சமுதாய பிரச்சினைகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது. பெண் குழந்தைகள் திருமணத்திற்கு பிறகு தங்கள் கல்வியை தொடர முடியாமல் போகிறது. இது பெண்கள் மேம்பாட்டிற்கு பெறும் தடையாக அமைகிறது. மேலும் இளம் வயதிலேயே கர்ப்பமாவதால் பெண் குழந்தைகள் உடல் அளவில் ஆரோக்கியம் இழக்கின்றனர். பிறக்கும் குழந்தைகளும் எடை மற்றும் உயரம் குறைவாக பிறக்கும் நிலை உருவாகிறது. குழந்தையைப் பெற்று வளர்க்கும் அளவிற்கு மனதளவில் பக்குவம் அடையாத வளர் இளம் பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. இவ்வாறாக குழந்தை திருமணம் செய்து கொள்ளும் வளர் இளம் பெண்கள் பொருளாதார ரீதியாக கணவரை சார்ந்து வாழும் நிலை ஏற்படுவதால் அதிக அளவில் குடும்ப வன்முறைக்கு ஆளாகின்றனர். பள்ளிக்கல்வி படிப்பை கூட நிறைவு செய்யாத இளம் பெண்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படும் சூழ்நிலைகள் உருவாகும். குழந்தை திருமணத்தின் பெரும் சமுதாய பாதிப்புகளை பொதுமக்கள் உணர்ந்து குழந்தை திருமணம் நடக்காத வகையில் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குழந்தை திருமணம் செய்து கொள்ளும் ஆண், குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றவாளியாக்கப்படுவார். மேலும் குழந்தை திருமணத்தை நடத்தி வைக்கும் பெற்றோர்கள், உறவினர்கள், மண்டப உரிமையாளர்கள் மற்றும் அத்திருமணத்தில் பங்கு பெற்ற அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை குழந்தை திருமணத்திற்கு எதிராக 70 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் பற்றி புகார் அளிக்க 1098 மற்றும் 181 என்ற இலவச உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க கூடாது. மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை