கலெக்டர் அலுவலகம் முற்றுகை
கள்ளக்குறிச்சி: பானையங்காலில் கிராம மக்களுடன் கலந்தாலோசிக்காமல் திடீரென திருவிழா தேதி அறிவிக்கப்பட்டதாக கூறி மனு அளிக்க வந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கள்ளக்குறிச்சி அடுத்த பானையங்கால் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; பானையங்கால் பொன்னியம்மன், செல்லியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது குறித்து, கிராம நாட்டாமை, முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் ஒன்று சேர்ந்து முடிவு செய்து தேதி நிர்ணயிப்பது வழக்கம். ஆனால், கோவில் தர்மகர்த்தா சில நபர்கள் உதவியுடன் தன்னிச்சையாக முடிவு செய்து கடந்த 26ம் தேதி திருவிழா ஆரம்பிப்பதாக மைக் மூலமாக தெரிவித்தார். திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான தட்டு எரிதலின் போது கர்ப்பிணி பெண்கள் ஊர் எல்லைக்கு வெளியே செல்ல வேண்டும். ஆனால் கிராம மக்களிடம் கலந்தாலோசிக்காமல் திடீரென தேதி அறிவிக்கப்பட்டதால் பெண்கள் வெளியே செல்ல முடியாது. இது குறித்து கேட்டபோது, திருவிழா நடத்த தடை செய்ய முயற்சிப்பதாக 7 பேர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டது. எனவே, கலெக்டர் நேரடியாக கிராமத்திற்கு வந்து விசாரித்து காலம், காலமாக பின்பற்றி வரும் நடமுறைப்படி திருவிழா நடத்த வழிவகை செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு அளிக்க வந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சிலர் மட்டும் அலுவலகம் சென்று மனு அளிக்குமாறு தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்தனர்.