மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து
கள்ளக்குறிச்சி; மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சி.இ.ஓ., மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் 19, 17, 14 வயதுக்குட்பட்ட பிரிவில் ஜூடோ, பீச் வாலிபால், நீச்சல், ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இம்மாணவர்கள் மாநில அளவில் கன்னியாகுமரியில் நடக்கும் ஜூடோ, பீச் வாலிபால், திருநெல்வேலியில் நடக்கும் நீச்சல் போட்டி, சென்னையில் நடக்கும் ஸ்குவாஷ் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று செல்லும் பள்ளி மாணவர்களை சி.இ.ஓ., கார்த்திகா வாழ்த்தினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.