தொகுதி வளர்ச்சி பணி: அமைச்சர் பொன்முடி ஆய்வு
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தொகுதி வளர்ச்சி பணி திட்டங்களை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட நாயனூர் ஊராட்சியில், 30 ஏக்கர் பரப்பளவில், சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்க நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியானது. இந்த நிறுவனம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். ஓரிரு மாதங்களில், 'சிட்கோ' அமையும் பகுதி சீரமைக்கப்பட்டு, தொழிற்சாலைகள் உருவாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.பெஞ்சல் காரணமாக சிதிலமடைந்த திருக்கோவிலுார் அணைக்கட்டை, ரூ.130 கோடி மதிப்பில், புனரமைக்க மானிய கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்ட நிலையில்,சீரமைப்பு பணி குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளுடன், அணைக்கட்டு பகுதியில், பொன்முடி நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அரகண்டநல்லுாரில் சிறு விளையாட்டு அரங்கை, பார்வையிட்டார்.இந்த ஆய்வில், விழுப்புரம் கலெக்டர் அப்துல் ரகுமான், கூடுதல் ஆட்சியர் பத்மஜா, ஆர்.டி.ஓ., முருகேசன், சிட்கோ கிளை மேலாளர் முகமதா பேகம் ஆகியோர் பங்கேற்றனர்.அதேபோல, திருக்கோவிலுரில், புதிய பஸ் நிலையம் அமையும் இடம் மற்றும் ஒருங்கிணைந்த வணிக வளாகம் கட்டும் பகுதியை அமைச்சர் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் கள்ளக் குறிச்சி கலெக்டர் பிரசாந்த், சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், நகர மன்ற தலைவர் முருகன், நகராட்சி ஆணையர் திவ்யா, மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் தங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.