மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள்... அதிகரிப்பு; ஓராண்டில் ரூ.7.26 கோடி பணம் அபேஸ்
தகவல் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் 'இன்டர்நெட்' பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் 'ஆண்ட்ராய்டு' செல்போனை பயன்படுத்துகின்றனர். தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப ஆன்லைன் மூலமாக நடைபெறும் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ-டியூப், ஸ்னாப்சாட் உள்ளிட்ட பொழுது போக்கு செயலிகளை பயன்படுத்தும் போது, ரம்மி, எளிமையாக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு, உடனடி லோன் செயலிகள் போன்ற வீடியோக்கள் அதிகளவில் ஒளிபரப்பாகிறது.மேலும், தெரியாத அல்லது புதிய தொடர்பு எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை எடுத்து பேசும் போது, அரசு அதிகாரிகள் பெயரை தெரிவித்து பணம் பறித்தல் 'டிஜிட்டல் கைது', வங்கி பெயரில் போலியான 'ஏ.பி.கே'., செயலியை 'வாட்ஸ் ஆப்' செயலியில் அனுப்பி செல்போனை 'ஹாக்' செய்தல், ஆபாச வீடியோ கால் அழைப்பு, பணம் இரட்டிப்பு, வீட்டிலிருந்தே வேலை செய்து சம்பாதிக்கலாம், கிரிப்டோ கரன்சி முதலீடு உட்பட பல்வேறு புதிய வழிமுறைகளை பயன்படுத்தி இணைய திருடர்கள் பணத்தை திருடி வருகின்றனர்.குறிப்பாக, மர்மநபர்கள் வயது முதிர்ந்தவர்களை தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம்., விபரங்களை பெற்று பணத்தை திருடுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் குறித்து வங்கிகள் சார்பிலும், சைபர் கிரைம் போலீசாரும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினாலும், பொதுமக்கள் பணத்தை இழந்து வருகின்றனர்.பட்டதாரிகள், அரசு வேலையில் இருப்பவர்களும் அதிகளவு ஏமாற்றமடைகின்றனர். இதில், லட்சக்கணக்கில் தொகை இழந்தவர்கள் மட்டுமே ஆன்லைன் மூலமாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளிக்கின்றனர்.அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஆன்லைன் மூலமாக 961 புகார்களை சைபர் கிரைம் போலீசார் பெற்றுள்ளனர். இதில், 64 புகார்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 784 புகார்கள் மீது சி.எஸ்.ஆர்., மட்டும் போடப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.7.26 கோடி பணத்தை பொதுமக்கள் இழந்துள்ளனர். ரூ.1.78 கோடி பணம் வேறு வங்கி கணக்கிற்கு மாற்றப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சைபர் கிரைம் போலீசார் 44 லட்சத்து 144 ரூபாய் பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். சைபர் கிரைம் குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேவையற்ற செயலிகளை தவிருங்கள்
இதுகுறித்து கூடுதல் எஸ்.பி., சரவணன் கூறியதாவது: இணையவழி குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணத்தை இழந்தவர்கள் 24 மணி நேரத்திற்குள் இலவச உதவி எண் 1930 தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் இழந்த பணத்தை மீட்க வாய்ப்புள்ளது. www.cybercrime.comஎன்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகார் அளிக்கலாம். தேவையற்ற செயலிகள் மற்றும் லிங்குகளை பயன்படுத்தாமல் இருத்தல், தெரியாத எண்ணில் இருந்து வரும் குறுஞ்செய்தியை தவிர்த்தல், கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட ஆன்லைன் முதலீடு தவிர்த்தால் பெரும்பாலான இணைய குற்றங்களை தவிர்க்கலாம் என்றார்.