உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முஸ்குந்தா ஆற்றை கடக்க முடியாமல் அவதி உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை

முஸ்குந்தா ஆற்றை கடக்க முடியாமல் அவதி உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே முஸ்குந்தா ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர் உள்ளிட்டோர், இறங்கி நடந்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சங்கராபுரம் அடுத்த பவுஞ்சிப்பட்டு, குமாரமங்கலம், புதுப்பட்டு காட்டுக்கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அப்பகுதிமக்கள் பல்வேறு அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, குமாரமங்கலம் - புதுப்பட்டு இடையே உள்ள முஸ்குந்தா ஆற்றை கடந்து சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். கல்வராயன்மலை பகுதியில் பலத்த மழை பெய்யும் போது, ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால், அந்த சமயங்களில், ஆற்றைக்கடந்து செல்ல கிராம மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதற்கிடையே ஆற்றை கடந்து செல்ல முடியாத வகையில் வெள்ளநீர் சென்றால், அப்பகுதி கிராம மக்கள் பிரம்மகுண்டம், குமாரமங்கலம், வடபொன்பரப்பி வருவதற்கு 10 கி.மீ., துாரம் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. இதனையொட்டி குமாரமங்கலம்-புதுப்பட்டு இடையே உள்ள முஸ்குந்தா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், கல்வராயன்மலை பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது முஸ்குந்தா ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது. விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் செல்கின்றனர்.குறிப்பாக பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் புத்தகப்பைகளை தலையில் சுமந்து ஆற்றை கடந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனால் இப்பகுதியில் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ