உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மேமாளூரில் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்

மேமாளூரில் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த மேமாளூர் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகள் புல்டோசர் மூலம் அகற்றப்பட்டது. திருக்கோவிலூர் அடுத்த மேமாளூர் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதனை அகற்றக்கோரி சில தனிநபர்கள் நீதிமன்றத்தை நாடியதை அடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்ற உளுந்தூர்பேட்டை நிர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது பற்றி வருவாய் துறை சார்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமித்து வீடு கட்டி இருக்கும் 30க் கும் மேற்பட்டவர்களுக்கு வெண்மார் கிராமத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டதாக தெரிகிறது. எனினும் இதனை ஏற்க மறுத்து விட்டனர். அப்பகுதியில் வீடு கட்டி குடியிருக்கும் 121 பேர் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.அதன்படி நேற்று திருக்கோவிலூர் தாசில்தார் ராமகிருஷ்ணன், டி.எஸ்.பி., பார்த்திபன், பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதற்கு குடியிருப்போர் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் ஜே.சி.பி., புல் டோசர் இயந்திரம் மூலம் கான்கிரீட் வீடுகள், ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் என 121 வீடுகளை இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பிற்காக 500க் கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை