டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியை விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இளநிலை பூச்சியியல் உதவியாளர்கள் சரவணன், சிட்டிபாபு முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார். மாவட்ட பூச்சிகள் வல்லுநர் சுப்பிரமணியன், கொசுவின் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறை குறித்தும், வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்வது குறித்து விளக்கினார். தொடர்ந்து, வீட்டில் உபயோகிக்கும் சிமென்ட் தொட்டி, பிளாஸ்டிக் டிரம், பாத்திரங்களை மூடி வைத்து உபயோகப்படுத்த வேண்டும். உபயோகம் இல்லாத உரல்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், டயர்களை அப்புறப்படுத்த வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருந்து கடைகளில் சென்று மருந்து வாங்கி சாப்பிட்டு சுயவைத்தியம் பார்க்காமல், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். கொசுவலை கொசு விரட்டிகளையும் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சுகாதார ஆய்வாளர்கள் விக்னேஷ்வரன், பாலா, களப்பணியாளர் புஷ்பராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ரவிக்குமார், மீனாட்சி, மாணவர்கள் கலந்து கொண்டனர்.