வளர்ச்சி திட்ட பணிகள் : கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஏமப்பேர் நகராட்சி துவக்கப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 33 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 2 புதிய வகுப்பறை கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து க.மாமனந்தல் கிராமத்தில், கனவு இல்ல திட்ட வீட்டின் கட்டுமான பணி மற்றும் 9 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உலர்களம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், மோகூரில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய நியாய விலை கடை கட்டுமான பணி; 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பொது சுகாதார கழிவறை கட்டடம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலக வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் நபார்டு திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டுமான பணி; தாவடிப்பட்டு கிராமத்தில் 3 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பில் முக்தா நதியின் குறுக்கே அமைக்கப்படும் உயர்மட்ட பாலம் பணிகளின் திட்ட மதிப்பீடு, பணி துவங்கிய காலம், கட்டுமான பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.