| ADDED : நவ 13, 2025 06:31 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடந்தது. அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களிடம் செல்வதை கண்காணிக்க மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் எம்.பி., மலையரசன் தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார். உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் உடனிருந்தார். கூட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மின் தேசிய வேளாண் சந்தை, வேளாண் உட்கட்டமைப்பு நிதி, நுண்ணுயிர் பாசனம், அஞ்சல், தாட்கோ உள்ளிட்ட 58 வகையான அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் விபரம் கேட்கப்பட்டது. அரசு திட்டப் பணிகளில் திட்ட தொகைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். சுகாதாரத் துறை தொடர்பான திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். துறை வாரியாக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் குறித்து பயனாளிகள் முழுமையாக அறிந்து கொள்ள அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், சப் கலெக்டர்(பயிற்சி) சுபதர்ஷினி, கள்ளக்குறிச்சி நகர்மன்றத் தலைவர் சுப்ராயலு உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.