மா.செ., முன்னிலையில் தி.மு.க.,வினர் கைகலப்பு உளுந்துார்பேட்டையில் பரபரப்பு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் தி.மு.க.,வினர் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தொகுதி மணிக்கண்ணன் எம்.எல்.ஏ.,வுக்கும், தி.மு.க.,வில் உள்ள 5 ஒன்றிய செயலாளர்களுக்கும் இடையே உட்கட்சி பூசல் நீடித்து வருகிறது. கட்சி விழாக்களில் ஒன்றியம், மாவட்டம் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தனது ஆதரவாளர்களுடன் எம்.எல்.ஏ.., பங்கேற்று வருவது நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இந்நிலையில், உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலைத் துறை பயணியர் மாளிகையில் நேற்று மதியம் 1:00 மணியளவில் அமைச்சர் வேலுவின் நேர்முக உதவியாளர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் உதயசூரியன் ஆகியோர் தலைமையில் உட்கட்சி பூசல் குறித்து விவாதிக்கவும், பூத் ஏஜன்ட்டுகள் பட்டியல் குறித்து ஆலோசிக்கவும் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அப்போது, பூத் ஏஜன்ட்டுகள் அடங்கிய பட்டியல்களை ஒன்றிய செயலாளர்கள் வழங்கியபோது எம்.எல்.ஏ., தனது தரப்பு பட்டியலை வழங்கினார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. எம்.எல்.ஏ.. ஆதரவாளர்களும், ஒன்றிய செயலாளர்களின் ஆதரவாளர்களும் கடுமையான வார்த்தைகளால் திட்டி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் குவிந்தனர். இரண்டு கோஷ்டியினரையும் சமரசம் செய்ய முயன்ற போது கட்சி நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டதால் அங்கிருந்த பைக்குகள் கீழே தள்ளப்பட்டு சேதம் அடைந்தன.மாவட்ட செயலாளர் உதயசூரியன் மற்றும் போலீசார் கட்சி நிர்வாகிகளை சமரசம் செய்தனர். அப்போது, மழை பெய்ததால் நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.