மின் ஊழியர்கள் சாலை மறியல் : 164 பேர் கைது
கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சி அண்ணா நகர், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 164 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார், சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் விஜயகுமார், செயலாளர் செந்தில், பொருளாளர் வீராசாமி ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர். மின் வாரியத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், கடந்த 2013ம் ஆண்டு ஒப்பந்தப்படி 1998ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்து தற்போது வரை ஒப்பந்த முறையில் பணிபுரியும் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்தல், தனியார் கம்பெனி மூலம் ஆட்கள் நிரப்பும் கொள்கை முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை மறியல் போராட்டம் நடந்தது. முன்னதாக மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து அண்ணா நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வரை பேரணியாக சென்று, காலை 11.30 மணிக்கு, சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தங்கவேல் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 164 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.