யானைக்கால் நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் முகாம்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் முகாம் நடந்தது.நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கீதா தலைமையில் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சுப்பிரமணியன் முன்னிலையில் நடந்த முகாமில் நகரப்பகுதி யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்களான பிளாஸ்டிக் கூடை, முக்காலி, தண்ணீர் ஜக், சோப்பு டப்பா, சோப்பு, துண்டு அடங்கிய பொருட்கள் வழங்கப்பட்டது.நோயாளிகள் 23 பேர்களுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கினர்.முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, இளநிலை பூச்சியியல் வல்லுநர் சரவணன் ஆகியோர் யானைக்கால் நோய் அறிகுறிகள், சிகிச்சை முறைகள், நோய் தடுப்பு முறைகள், நோயினால் பாதிக்கப்பட்ட கால்கள் கைகள் ஆகியவற்றை சுகாதாரமாக பராமரிக்கும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.