அமைச்சர் பதவி தொடர்பான பேச்சால் மேடையில் மாஜி அமைச்சர் அப்செட்
கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர் மோகன் இடையே மறைந்த ஜெ., இருந்தபோதே இலைமறை காயாக பணிப்போர் நிலவியது. மாவட்ட செயலாளர், சட்டசபை தேர்தல்களில் சீட் பெறுவது, அமைச்சர் பதவி பெறுவதில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் சூழ்நிலையை கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க.,வில் காணமுடியும். இருவரும் மாவட்ட செயலாளர் பதவி வகித்துள்ளனர். ஆனால், அமைச்சராக மோகன் மட்டுமே இருமுறை பதவி வகித்துள்ளார்.தற்போது மாவட்ட செயலாளராக உள்ள குமரகுரு, கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கிறார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கட்சியின் 53ம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டம் நடந்தது. இதில் எதிர்கட்சி துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் பங்கேற்று பேசினார்.மாவட்டத்தில் குமரகுரு சிறப்பாக கட்சியை வழிநடத்தி செல்வதாக பாராட்டிய நிலையில், இறுதியாக பேசி முடிக்கும் போது, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரும் போது அமைச்சரவார் என்றார். உடன் நிர்வாகிகள் பலர் பலத்த கரகோஷம் எழுப்பி ஆராவாரம் செய்தனர்.அப்போது மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் மோகன் அப்செட் ஆனதுடன், அவரது முகம் திடீரென வாடிபோனது. அ.தி.மு.க.,வில் கட்சியிலும், சட்டசபை சபையிலும் முக்கிய பொறுப்பில் இருக்கும் உதயகுமார், அமைச்சர் பதவி தொடர்பாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. -நமது நிருபர்--