சாத்தனுார் அணையில் தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
திருக்கோவிலுார்: சாத்தனுார் அணை இந்தாண்டு அதன் முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் திறக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனுார் அணை உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 119 அடி; 7,321 மில்லியன் கன அடி. தென்மேற்கு பருவமழை காலத்தில் தென்பெண்ணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் நந்திதுர்கா மலை மற்றும் பெங்களூரு நகர் பகுதிகளில் பெய்யும் மழை நீர் பாய்ந்தோடி தமிழக எல்லையான கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளை நிரப்பி கொண்டு சாத்தனுார் அணைக்கு வரும். இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை துவக்கத்தில், சாத்தனுார் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவது வழக்கம். இந்தாண்டு அணையின் பாதுகாப்பு கருதி, 116 அடியாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்து இருப்பதால், அதன் முழு கொள்ளளவான, 119 அடியை எட்டியது. நேற்று மதியம் 12:00 மணி நிலவரப்படி 118.80 அடி, 7,276 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது. அணை முழுமையாக நிரம்பியதால் அணைக்கு வரும் உபரி நீர் 226 கன அடி அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக, தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணையில் மீண்டும் தண்ணீர் வரத்து துவங்க உள்ளது. இது விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.