வன உரிமைச்சான்று பெற்ற விவசாயிகள்; பி-எம்., கிசான் திட்டத்தில் பயன்பெறலாம் மாவட்ட கலெக்டர் தகவல்
கள்ளக்குறிச்சி: வன உரிமைச் சான்று பெற்ற விவசாயிகள் பி-எம்., கிசான் திட்டத்தில் பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :கல்வராயன்மலை ஒன்றியத்திற்குட்பட்ட 15 ஊராட்சிகளில் இதுவரை 2,671 பழங்குடியின விவசாயிகளுக்கு வன உரிமைச்சான்று வழங்கப்பட்டுள்ளது. வன உரிமைச் சான்று பெற்ற விவசாயிகள் பி-எம்., கிசான் திட்டத்தில் பயனடையலாம். பி-எம்., கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரத்தை மூன்று தவணைகளாக (4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம்) விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.இத்திட்டத்தின்கீழ் ஒரு குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே பயன்பெற முடியும். இத்தொகையை கொண்டு விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை வாங்கி பயனடையலாம்.எனவே, பழங்குடியின விவசாயிகள் தங்களது வன உரிமைச் சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், கைப்பேசி எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் பொது சேவை மையத்திற்கு சென்று பதிவு செய்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.