கோடை உழவு பணி விவசாயிகள் தீவிரம்
தியாகதுருகம்: மாவட்டத்தில் பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்து நிலத்தை பயிர் சாகுபடிக்கு தயார் செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து மண்ணில் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் நிலங்களில் கோடை உழவு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.இதன் மூலம் மண்வளத்தை மேம்படுத்தி களைகளை அழிக்க முடியும். அதேபோல் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மண்ணின் நீர் சேமிப்பு திறனை அதிகரிக்கவும் கோடை உழவு முக்கிய பங்காற்றுகிறது. கோடை உழவு செய்வதன் மூலம் மண் புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு வாழ்விடத்தை ஏற்படுத்தி அவை மண்ணின் சத்துக்களை மேம்படுத்துகிறது. கோடை உழவின் போது ஆழமாக உழுவதால் கடினமான மேலடுக்கு உடைந்து மண்ணின் காற்றோட்டம் அதிகரித்து பயிர் சாகுபடி செய்வதன் போது விதைகள் எளிதில் முளைக்கவும் அவைகளுக்கு சத்துக்கள் கிடைக்க வழிவகை செய்கிறது. குறிப்பாக ஆடிப்பட்டத்திற்கு பயிர் சாகுபடி செய்வதற்கு ஏற்றபடி நிலத்தை பன்படுத்தி தயார் செய்யும் வகையில் தற்போது பெய்துள்ள மழை ஈரத்தை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.