விவசாயிகள் அடுத்த தவணை நிதி பெற்றிட தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதமர் கவுரவ நிதி திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் அடுத்த தவணை நிதி பெறுவதற்கு தனித்துவ அடையாள எண் பதிவு செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி செய்திக்குறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய அடையாள எண் பெறாமல் 22,511 பேர் உள்ளனர். இவர்கள் பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் 21வது தவணை 2025 நவம்பர் மாதத்தில் பெறுவதற்கு உடனடியாக இ.கே.ஓ.சி. பதிவு, ஆதார் வங்கி கணக்கு இணைப்பு மற்றும் தங்களது தனித்துவ விவசாய அடையாள எண் பெற வேண்டும். முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் சிட்டா பெற்று அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால் மட்டுமே அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து பெற முடியும். இதன்படி இன்று துவங்கி நாளை மறுநாள் 7ம் தேதி வரை அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் நடக்கும் சிறப்பு முகாமில், அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு சிட்டா, ஆதார் மற்றும் தங்களது ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுடன் சென்று உடனடியாக பதிவு செய்திட வேண்டும். இம்முகாமில் கடந்த ஆண்டு பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு இன்னும் நிவாரணத் தொகை பெறப்படாமல் உள்ள விவசாயிகள் தங்களின் வங்கி கணக்கு எண்ணின் சரியான விவரங்கள் மற்றும் ஆவணங்களை அளிக்காததால் நிதி பயன் பெறவில்லை. எனவே தங்களின் வங்கி கணக்கு எண் சரியான விவரங்கள் மற்றும் ஆவணங்களை சம்மந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநர்களிடம் அளித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.