விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கச்சேரி சாலை அம்பேத்கர் சிலை அருகே, டில்லி விவசாயிகள் போராட்டத்தின் 6ம் ஆண்டு நினைவையொட்டி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஸ்டாலின்மணி, பொருளாளர் ஏழுமலை, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஜோதிராமன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் பழனி, செயலாளர் சுப்பரமணி, தலைவர் கஜேந்திரன், பொருளாளர் தேவேந்திரன், அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், டில்லியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும். விவசாயிகளின் இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார மசோதாவை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளின் பயிர்கடனை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.