அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வருவாய்த்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.55 ஆயிரம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.கல்வராயன்மலையில் உள்ள கல்படை கிராமத்தை சேர்ந்தவர் ராமர் மகன் தென்னரசு,21; டிப்ளமோ பட்டதாரி. கடந்த செப்., மாதம் 25ம் தேதி செல்போனில் வந்த அழைப்பினை எடுத்து பேசியுள்ளார். அதில், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், வருவாய்த்துறையில் அலுவலக உதவியாளர் பணி காலியாக உள்ளது, வேலை வேண்டுமெனில் பணம் செலுத்த வேண்டும் எனவும் மர்ம நபர்கள் தெரிவித்துள்ளனர். இதை நம்பி 4 தவணைகளில் ரூ.55 ஆயிரம் பணத்தை மர்ம நபர்களுக்கு தென்னரசு அனுப்பியுள்ளார். மர்மநபர்கள் தொடர்ந்து பணம் கேட்டு வற்புறுத்தும் நிலையில், வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருகின்றனர்.இதில் சந்தேகமடைந்த தென்னரசு புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.