உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வாசவி மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமை தாங்கி பேசியதாவது: விநாயகர் சதுர்த்திக்கு புதிய சிலை வைக்க அனுமதி கிடையாது. சிலைகளின் உயரம் 10 அடிக்குள் இருக்க வேண்டும். வழக்கம் போல் வைக்கும் இடத்தில் மட்டும் சிலையை வைக்க வேண்டும். ஊர்வலம் வழக்கம்போல் செல்லும் பாதையில் செல்ல வேண்டும். சிலை வைக்க ஆர்.டி.ஓ.,வின் அனுமதி பெற வேண்டும். சிலைகளை கீற்றுக் கொட்டகையில் வைக்கக் கூடாது. தீப்பற்றும் பொருட்களை வைக்கக்கூடாது. களி மண்ணால் செய்த சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். ஜாதி, மத கட்சி சார்ந்த விளம்பரங்களை வைக்கக் கூடாது. காலை 2:00 மணி நேரம், மாலை 2:00 மணி நேரம் ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும். கல்வி நிலையம், மருத்துவமனை, பிற வழிபாட்டுத் தலங்களின் அருகில் சிலை வைக்க கூடாது. சிலை வைப்பவர்கள், மின்வாரியம், தீயணைப்பு துறையினரிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும். சிலை ஊர்வலத்திற்கு மாட்டு வண்டி, மீன் பாடி வண்டிகளில் சிலைகளை எடுத்துச் செல்லக்கூடாது. டிராக்டர், டாடா ஏஸ் உள்ளிட்ட வாகனங்களில் சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு சப் இன்ஸ்பெக்டர் பிரபு பேசினார். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார். கூட்டத்தில் சங்கராபுரம் காவல் சரகத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்த விநாயகர் சதுர்த்தி விழாக்குழுவினர் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை