சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை வார சந்தையில், ரூ.3 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானது. உளுந்துார்பேட்டையில் புதன்கிழமை தோறும் ஆட்டு வார சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று ஆடுகளின் வரத்து அதிகமாகவே இருந்தது. உளுந்துார்பேட்டை, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்துார், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் வருகை புரிந்திருந்தனர். இதனால் வழக்கத்துக்கு மாறாக ஆடுகள் விலை அதிகரித்தது. சிறிய ஆடு ரூ. 4 ஆயிரத்திற்கும், பெரிய ஆடு ரூ.30 ஆயிரத்திற்கும் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை நடந்தது. வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கினர். இதன் மூலம் நேற்று சந்தையில் ரூ.3 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை நடந்தது.