உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியை தவிர்க்கும் ஸ்டாலின் தோல்வி சென்டிமென்ட் காரணமா? காரணம் புரியாமல் தவிக்கும் தி.மு.க.வினர்

கள்ளக்குறிச்சியை தவிர்க்கும் ஸ்டாலின் தோல்வி சென்டிமென்ட் காரணமா? காரணம் புரியாமல் தவிக்கும் தி.மு.க.வினர்

தமிழகத்தில் தி.மு.க., அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் கடந்து விட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வளர்ச்சி பணி திட்டங்களை அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி பணி திட்டங்கள் துவக்கி வைக்க முதல்வர் வருகைதர இருப்பதாக கூறி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இது ஜூலை மாதத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் அப்பொழுதும் முதல்வர் வரவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் வந்த முதல்வர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களின் வளர்ச்சி திட்ட பணிகளை விழுப்புரத்தில் இருந்தபடியே ஆய்வு செய்து விட்டு சென்றார். அதன் பிறகு அரசு நிகழ்ச்சி மட்டுமின்றி, கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சிகளில் இரண்டு முறை பங்கேற்பதற்காக முதல்வர் வருவார் என அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். அதனையும் முதல்வர் ஸ்டாலின் தவிர்த்து விட்டார். கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்கும் கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் வரவில்லை. அருகில் உள்ள விழுப்புரம் மாவட்டத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் முதல்வர், கள்ளக்குறிச்சிக்கு வருவதை தவிர்ப்பதற்கு காரணம் உளவுத்துறையின் தகவல்படி, மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடில் முதல்வருக்கு திருப்தி இல்லை என்கின்றனர் கட்சியினர். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மாவட்ட எஸ்.பி.,யாக செல்வகுமார் நியமிக்கப்பட்டார். 2022ம் ஆண்டு ஜூலை நடந்த கனியாமூர் பள்ளி கலவரத்தின் காரணமாக அவர் மாற்றப்பட்டார். அதன்பிறகு பகலவன் பொறுப் பேற்றுக் கொண்டார். அடுத்த ஆறு மாதத்திற்குள் இவரும் மாற்றப்பட்டு, மோகன்ராஜ் எஸ்.பி., யாக நியமிக்கப்பட்டார். ஓராண்டை நிறைவு செய்வதற்கு முன்பாக, விருப்ப ஓய்வு பெற்று சென்றுவிட்டார். அதன் பிறகு 2023 டிசம்பர் 16ம் தேதி சமய் சிங்மீனா பொறுப்பேற்றார். இவரும் கருணாபுரம் கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு, கடந்தாண்டு ஜூன் மாதம் ரஜத் சதுர்வேதி பொறுப்பேற்றார். இவரும் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது மாதவன் நியமிக்கப் பட்டுள்ளார். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 5 எஸ்.பி., கள் மாற்றப்பட்டு இருப்பதன் பின்னணியில் அதிகாரிகளுக்கு, அரசியல் பிரமுகர்களால் கொடுக்கும் அழுத்தம் காரணம் என கூறப்படுகிறது.

திடுக் தகவல்

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக கடந்த 2019ம் ஆண்டு சட்டசபையில் அறிவித்து, அதே ஆண்டு நவ., மாதம் அ.தி.மு.க., ஆட்சியில் உதயமானது. அப்போதைய முதல்வர் பழனிசாமி கள்ளக்குறிச்சியில் மாவட்ட செயல்பாட்டை துவக்கி வைத்தார். அதன் பின்பு நடந்த தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சியை இழந்தது. இந்த சென்டிமென்ட் காரணமாக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சியை புறக்கணிக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் எதற்காக முதல்வர் ஸ்டாலின் மாவட்டத்தை புறக்கணித்து வருகிறார் என்ற மர்மம் புரியாமல் தி.மு.க.வினர் தவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !