உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேசிய திறனாய்வு தேர்வில் கள்ளக்குறிச்சி அசத்தல்! மாநில அளவில் 23வது இடத்தை பிடித்தது

தேசிய திறனாய்வு தேர்வில் கள்ளக்குறிச்சி அசத்தல்! மாநில அளவில் 23வது இடத்தை பிடித்தது

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு (என்.எம்.எம்.எஸ்) நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்று, 9 முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்றால் மாதந்தோறும் 1,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். அதன்படி, 48 மாதங்களுக்கு 48 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.தேர்வில், மனத்திறன் மற்றும் படிப்பறிவுத்திறன் சார்ந்து 180 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். இதில், 40 சதவீத மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக கருதப்படுவர்.இனசுழற்சி அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். பெற்றோர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற இத்தேர்வில், அதிகளவு மாணவ, மாணவிகளை தேர்ச்சி பெற செய்ய சி.இ.ஓ., கார்த்திகா திட்டமிட்டார். அதன்பேரில், ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு, வட்டார அளவில் 4 மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் இத்தேர்வெழுத 7,059 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். கடந்த பிப்., மாதம் 22ம் தேதி தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 126 பேர் தேர்ச்சி பெற்று, ஊக்கத்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். தொண்டனந்தல் மற்றும் செங்குறிச்சி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த தலா 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, எண்ணிக்கையில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தனர். 9 பள்ளிகளை சேர்ந்த தலா 3 மாணவர்கள் தேர்ச்சி பெற்று இரண்டாமிடத்தை பிடித்துள்ளனர். ஊக்கத்தொகை பெறும் எண்ணிக்கை பட்டியலில் மாநில அளவில் 23வது இடத்தை கள்ளக்குறிச்சி மாவட்டம் பிடித்துள்ளது. கடந்தாண்டு நடந்த தேர்வில் 85 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் அதிகரித்து, 126 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி