எடை பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலுார்: பழைய இ-நாம் திட்டத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வலியுறுத்தி, அரகண்டநல்லுாரில் ஒழுங்குமுறை விற்பனை கூட எடை பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இ-நாம் திட்டம் 2.0 நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து கடந்த 21ம் தேதியிலிருந்து வியாபாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக எடை பணி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பழைய இ-நாம் 1.0 மற்றும் 'விர்ச்சுவல் அக்கவுண்ட்' நடைமுறையை 6 மாதங்களுக்கு தொடர வேண்டி, தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட எடை பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அரகண்டநல்லுார் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைத் தலைவர் பழனி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சரவணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் அஞ்சாமணி, எடை பணி தொழிலாளர் சங்க செயலாளர் ரவிச்சந்திரன், மாநில பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் முருகன், செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.