மேலும் செய்திகள்
வழிப்பறி வழக்கில் ஒருவர் கைது
07-Jul-2025
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுாரில் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபரை,2 நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், காரணை பெரிச்சானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் ஜெகன், 45; பைனான்ஸ் தொழில் செய்கிறார். கடந்த 4ம் தேதி, வசூலை முடித்துக் கொண்டு, அரகண்டநல்லுாரில் இருந்து ஆற்காடு சாலையில் பைக் கில் சென்றார்.காக்காகுப்பம் ஓடை அருகே சென்றபோது எதிரில் பைக்கில் வந்த கீழக்கொண்டூரை சேர்ந்த அபிமன்யு மகன் பிரவீன்குமார், 26; மற்றும் இரண்டு பேர் வழிமறித்து, ஜெகனி டம் இருந்து 50,000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து பிரவீன்குமாரை கடந்த 5ம் தேதி கைது செய்தனர். போலீஸ்காரர்கள் மணி வண்ணன், பாண்டியன் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக பிரவீன்குமாரை பைக்கில் அமர வைத்து, திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனை வளாகத்தில் பைக்கை நிறுத்தியவுடன் பிரவீன்குமார் தப்பி சென்றார். இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருக்கோவிலுார் மற்றும் அரகண்டநல்லுார் போலீசார் பிரவீன்குமாரை தேடி வந்தனர். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு, கண்டாச்சிபுரம் அருகே இருக்கும் அவரது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, பிரவீன்குமார் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தபோது, அவ்வழியாக சென்ற போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணைநல்லுார் நீதிமன்றத்தில் பிரவீன்குமாரை ஆஜர்படுத்தி, விழுப்புரம் வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.
07-Jul-2025