பாலத்தில் துாங்கியவர் தவறி விழுந்து பலி
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே குடிபோதையில் கல்வெட்டு பாலத்தில் துாங்கியவர் தவறி விழுந்து இறந்தார். திருக்கோவிலுார் அடுத்த பொன்னியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் மகன் ஏழுமலை, 48; கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால், மதுபானம் குடித்து விட்டு அங்குள்ள வடிகால் வாய்க்கால் கல்வெட்டு பாலத்தில் படுத்து துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, தவறி வாய்க்காலில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். மாலை 5:00 மணிக்கு, வாய்க்காலில் ஏழுமலை இறந்து கிடப்பதை பார்த்து அவரது மகன் அரிகிருஷ்ணன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.