செங்கனாங்கொல்லையில் துணை மின் நிலையம் எம்.எல்.ஏ., கேள்விக்கு அமைச்சர் பதில்
திருக்கோவிலுார்: செங்கனாங்கொல்லையில் துணைமின் நிலையம் அமைக்கப்படுமா என வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பினார்.ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட செங்கனாங்கொல்லை ஊராட்சியை சுற்றி ஜி.அரியூர், மேமாளூர், பொன்னியந்தல், ரிஷிவந்தியம், காட்டுசெல்லுார் என, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதற்கு திருக்கோவிலுார் மற்றும் தியாகதுருகம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பகிரப்படுகிறது. துணை மின் நிலையங்களில் இருந்து இக்கிராமங்கள் வெகு துாரத்தில் இருப்பதால் தாழ்வழுத்த மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் விவசாய மின் மோட்டார்க்கு போதுமான மின் வினியோகம் வழங்கப்படுவதில்லை. எனவே செங்கனாங்கொல்லையில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 23 ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வருகிறது.இதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 2 ஏக்கர் நிலம் முறைப்படி மின் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில் சட்டசபையில் தொகுதி எம்.எல்.ஏ., வான வசந்தம் கார்த்திகேயன் செங்கனாங்கொல்லை ஊராட்சியில், 110/22 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு, நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. துணை மின் நிலையம் இந்த ஆண்டு துவங்க வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 'புதிய துணை மின் நிலையம் எங்கெங்கு தேவை என்பதை உறுப்பினர்கள், அமைச்சர்களின் கோரிக்கைகள் முழுவதுமாக துறைக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள மின் தேவையை கணக்கில் கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்' என்றார்.