காவலர், தீயணைப்பாளர் தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் தேர்வர்களுக்கான இலவச மாதிரி தேர்வுகள் நடக்கிறது.இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள, இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய 3,644 காலிப்பணியிடத்திற்கான தேர்வு வரும் நவ., 9ம் தேதி நடக்கிறது. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை அளிக்கப்படுகிறது. தேர்வுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்வர்கள் பயனடையும் வகையில், வரும் 30ம் தேதி முதல் செவ்வாய் கிழமை தோறும் இலவச மாதிரி தேர்வு நடக்கிறது. தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர் 04151-295422 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.