நன்றி சொல்ல வராத எம்.பி.,: புலம்பும் உடன் பிறப்புகள்
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதி அனைவராலும் உற்று நோக்கப்பட்டது.அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுருவுக்கும் தி.மு.க., வேட்பாளராக புதிதாக களம் இறக்கப்பட்ட மலையரசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மலையரசனுக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., நேரடியாக களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றினார்.தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெறவில்லை எனில் தனது பதவிகளை ராஜினாமா செய்வதாக அவர் சவால் விட்டார். இதனால் தேர்தல் களம் சூடு பறந்தது. அ.தி.மு.க.,வில் எதிரெதிர் துருவமாக இருந்த நிர்வாகிகளும் ஒன்றிணைந்து குமரகுருவை வெற்றி பெற வைக்க பாடுபட்டனர். ஆனால் கூட்டணி பலம், பண பலம் இவற்றால் தி.மு.க., வெற்றி பெற்றது. இருப்பினும் கடந்த லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியை போல் அல்லாமல் 53,784 ஓட்டு வித்தியாசத்தில் மலையரசன் வெற்றி பெற்றார்.மலையரசன் ஓட்டு கேட்டு பிரசாரத்திற்கு சென்ற போது பல கிராமங்களில், கடந்த முறை எம்.பி., யாக வெற்றி பெற்ற கவுதம சிகாமணி நன்றி கூற வரவில்லை என்பதை பொதுமக்கள் பெரும் குறையாக கூறினர்.அவர்களை சமாதானப்படுத்திய தி.மு.க., கூட்டணி நிர்வாகிகள், மலையரசன் நம் தொகுதியை சேர்ந்தவர் வெற்றி பெற்றதும் முதல் வேலையாக உங்களை சந்தித்து நன்றி கூறுவார் என்று உறுதி அளித்தனர். ஆனால் மலையரசன் எம்.பி., ஆகி 5 மாதங்கள் ஆகியும் இதுவரை நன்றி கூற வரவில்லை. இதனால் பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்த தி.மு.க., நிர்வாகிகள் என்ன செய்வதென்று புரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.மலையரசன் நன்றி கூற வரவில்லை என்றால் அடுத்த தேர்தலில் மக்களை சந்தித்து எப்படி ஓட்டு கேட்பது என புரியாமல் உடன்பிறப்புகள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.