உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம்! உளுந்துார்பேட்டையில் மக்கள் அவதி

ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம்! உளுந்துார்பேட்டையில் மக்கள் அவதி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை பகுதியில் ஓட்டுக்காக அரசியல் கட்சியினரின் தலையீட்டால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் சுணக்கம் காட்டுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தினம் தினம் அவதியடைந்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதற்கான வளர்ச்சியோ, வாகன போக்குவரத்துக்கான சாலை வசதிகளோ இல்லை. மாறாக சாலைகளில் கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். உளுந்துார்பேட்டை பல்வேறு பகுதிகளின் மையப் பகுதியாக இருப்பதால் வாகன போக்குவரத்து மிகுதியாகவே இருந்து வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த உளுந்துார்பேட்டையில் வாகனங்கள் எளிதில் செல்ல முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர். பஸ் நிலையம் அருகே, சென்னை சாலை, திருவெண்ணெய்நல்லுார் சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகளால் கடைக்கு பொருட்களை வாங்க வரும் பொது மக்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால் அவ்வழியாக வானங்கள் எளிதாக செல்ல முடியாமல் திணறி வருகின்றன. இதுமட்டுமின்றி சாலையோர கடைகள், அதிகரித்துள்ளதாலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை பிசியான நேரத்தில் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் என அனைவரும் அவதிக்குள்ளாகின்றனர். சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய போக்குவரத்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. வாகனங்கள் சாலையில் நிற்பதால் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கிறது. நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தொலைதுார விரைவு பஸ்கள் உளுந்துார்பேட்டை ஊருக்குள் செல்லாமல் புறவழிச் சாலைகளிலேயே செல்வதால் பயணிகள் திண்டாடி வருகின்றனர். அரசியல் கட்சியினர் ஒரு சிலரின் ஓட்டுகளுக்காக கடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முட்டு கட்டை ஏற்படுகிறது. அதற்கேற்ப மாவட்ட நிர்வாகமும், நகராட்சி அதிகாரிகளும் வாகன ஓட்டிகள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் சுணக்கம் காட்டி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம், போலீசார், நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் வாகன போக்குவரத்தை சரி செய்ய போக்குவரத்து போலீசார் பஸ் நிலையப் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ