சாத்தனுார் அணையில் அதிகாரிகள் ஆய்வு
திருக்கோவிலுார் : சாத்தனுார் அணையை தலைமை பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். பெஞ்சல் புயல் காரணமாக சாத்தனுார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த அதீதமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து 2ம் தேதி அதிகாலை 2:45 மணியளவில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அன்று மதியம் 2:00 மணிக்கு அணைக்கான நீர்வரத்து 68 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் நீர் வெளியேற்றமும் குறைக்கப்பட்டது. அணையின் பாதுகாப்பு ஏற்பாடுகள், அதிகப்படியான நீர் வரத்து மற்றும் வெளியேற்றம் பற்றி சென்னையில் இருந்து வந்த பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜானகி தலைமையில், பொறியாளர்கள் சிவக்குமார், அறிவழகன், ராஜாராம், சந்தோஷ் உள்ளிட்டோர் அணையை ஆய்வு செய்தனர்.நேற்று மாலை 3:00 மணி அளவில் வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது. தற்போது, 7,321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 7,079 மில்லியன் கன அடி நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.அதற்கு மேல் அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் வெகுவாக வடிந்து வருகிறது. இருப்பினும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து நீர் வரத்து அதிகரித்தால், ஆற்றில் எந்த நேரத்திலும் நீர்வரத்து அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.