ஊராட்சி தலைவர்கள் அரை நிர்வாண போராட்டம்
உளுந்துார்பேட்டை : திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் பணி ஆணை வழங்க கோரி ஊராட்சி தலைவர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.உளுந்துார்பேட்டை தாலுகா திருநாவலுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடைபெறும் பணி ஆணை, ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த பணி ஆணையை வழங்க வலியுறுத்தி 30 ஊராட்சி தலைவர்கள் நேற்று காலை 11:30 மணியளவில் திருநாவலுார் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை அறிந்த பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் ஊராட்சி தலைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது. பின்னர் பி.டி.ஓ., செல்வபோதகர் பணி ஆணை வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை தொடர்ந்து நேற்று மதியம் 3:00 மணியளவில் ஊராட்சி தலைவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.