அறநிலையத் துறையை கண்டித்து ஊராட்சி தலைவர் மனு
கள்ளக்குறிச்சி : திருவரங்கத்தில் ஊராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கடையை அகற்ற வலியுறுத்தும் அறநிலையத்துறை அலுவலர்களை கண்டித்து ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மனு விபரம்:திருவரங்கத்தில் பழமை வாய்ந்த அரங்கநாத பெருமாள் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக துாய்மை பணி, குடிநீர் வசதி ஆகியவை ஊராட்சி நிர்வாகம் மூலம் செய்து வருகிறோம்.ஊராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டும் வகையில் வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தில், பல்பொருள் விற்பனை செய்யும் அங்காடி அமைத்து வாடகைக்கு விட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.ஆனால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடை அமைக்க அறநிலையத்துறை அலுவலர்கள், நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை கோவில் இடம் என கூறி அங்கு புதிதாக கடைகள் கட்டப்போவதாக தெரிவிக்கின்றனர்.ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட கடையை காலி செய்யுமாறு தெரிவிக்கின்றனர். இந்த இடப்பிரச்னை தீர்வு காண்பதுடன், வருவாய்த்துறைக்கு சொந்தமான காலி இடத்தை அறநிலையத்துறைக்கு பட்டா வழங்க கூடாது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.