கிடப்பில் சிமென்ட் சாலை பணி குடியிருப்பு மக்கள் கடும் அவதி
கள்ளக்குறிச்சி : நைனார்பாளையத்தில் ஜல்லிகள் கொட்டப்பட்டு சாலை அமைக்கும் பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சின்னசேலம் அடுத்த நைனார்பாளையம் போயர் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. முறையான சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதனையொட்டி நைனார்பாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முதல் வீரபத்திரன் கோவில் வரை சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்காக பல மாதங்களுக்கு முன் ஜல்லிகள் கொட்டப்பட்டது. ஆனால் சாலை பணி இதுவரை துவங்கப்படவில்லை. சாலையோரம் கொட்டப்பட்ட ஜல்லிகள் தெரு முழுதும் சிதறி கிடக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலையில் சிதறியுள்ள ஜல்லிகளால் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் சறுக்கி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி சாலை பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.