சரக்கு வாகனங்கள் அடாவடி தியாகதுருகத்தில் மக்கள் அவதி
தியாகதுருகம்: தியாகதுருகம் நகரில் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனங்களை நிறுத்தி பொருட்களை இறக்குவதால் போக்குவ ரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின் றனர். தியாகதுருகம் நகரின் வழியாக சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அகலம் குறைவான இச்சாலையில் கனரக வாகனங்கள் எதிரெதிரே மிகுந்த சிரமப்பட்டு செல்கின்றன. சில கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து விளம்பர பலகை மற்றும் வியாபார பொருட்களை வைப்பதால் சாலை மேலும் குறுகி விடுகிறது. இதனால் அலுவலகம் மற்றும் பள்ளி நேரங்களில் நடந்து செல்லும் பாதசாரிகள் திக். திக். பயத்துடன் கடந்து செல்ல வேண்டி உள்ளது. அடிக்கடி சிறு சிறு சாலை விபத்துக்களும் நடக்கிறது. இந்த நிலையில், கடைகளுக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள், கடைகள் எதிரில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி பொருட்களை இறக்குகின்றனர். ஒவ்வொரு கடையாக நிறுத்தி பொருட்களை இறக்கி செல்வதற்குள் பின்னால் வரும் மற்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை போலீசாரும் கண்டு கொள்வதில்லை. லாரிகளில் கொண்டு வரும் பொருட்களை சந்தைமேடு அருகே இறக்கி சிறிய வாகனங்களில் ஏற்றிச் சென்றால் இது போன்ற போக்குவரத்து இடையூறை தவிர்க்கலாம். போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் தியாகதுருகம் நகர சாலைகளில், சரக்கு வாகனங்களை நிறுத்தி பொருட்களை இறக்குவதை போலீசார் உடனடியாக தடை செய்ய வேண்டும்.