சாலை ஆக்கிரமிப்பு அகற்றி அகலப்படுத்த மக்கள் மனு
கள்ளக்குறிச்சி; பொ.மெய்யூர் கிராம மண் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்தக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மனு விபரம்:பொ.மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கரும்பு, வேர்க்கடலை, மக்காச்சோளம், கேழ்வரகு, உளுந்து என விளை பொருட்களை அறுவடை செய்து, கனரக வாகனங்களில் கொண்டு செல்வது வழக்கம். விளைநிலத்தில் இருந்து வெளியே செல்லும் வகையில் உள்ள மண்சாலையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.மேலும் சாலை குறுகிய அளவில் இருப்பதால், விளை பொருட்களை டிராக்டர்களில் கொண்டு செல்ல முடியவில்லை.எனவே, மண் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.