காவலர் பணியிடங்கள் காலி; வழக்குகள் தீர்வு காண சிக்கல்
மூங்கில்துறைப்பட்டு; வட பொன்பரப்பி போலீஸ் ஸ்டேஷனில் போதிய காவலர்கள் இல்லாததால் வழக்குகளை தீர்வு காண்பதில் தாமதம் ஏற்படுகிறது.மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி போலீஸ் ஸ்டேஷன் 28 கிராமங்களை எல்லையாக கொண்டது. இக்கிராமங்களானது கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. போலீஸ் ஸ்டேஷனில் 2 சப் இன்ஸ்பெக்டர், 2 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்,ஒரு ரைட்டர், 14 காவலர்கள் என 19 பேர் பணியில் இருக்க வேண்டும்.ஆனால், ஒரு சப் இன்ஸ்பெக்டர், 2 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர், 6 காவலர்கள், 1 ரைட்டர் என பத்து காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி தீர்வு காண முடியவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக, போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, போதிய காவலர்களை நியமிக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.