பிரேமலதாவின் ரிஷிவந்தியம் விஜயம்; திராவிட கட்சிகள் கலக்கம்
தே மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்ற பெயரில் அனைத்து தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த 13ம் தேதி ரிஷிவந்தியம் தொகுதியில் சுற்றுப் பயணம் மே ற்கொண்டார். தொகுதியின் முக்கிய பகுதியான ஜி.அரியூர், மணலுார்பேட்டை, பகண்டை கூட்டு சாலை பகுதிகளில் வேனில் இருந்தபடியே, குவிந்திருந்த தொண்டர்கள் மத்தியில் உற்சாகப்படுத்தும் வகையில் உரையாற்றினார். ரிஷிவந்தியம் தொகுதி முற்றிலும் விவசாயத்தை நம்பி இருக்கும் மிகவும் பின்னடைந்த தொகுதி. பணம் கொடுத்தால் மட்டுமே கூட்டத்தை கூட்ட முடியும் என்ற நிலையில், கட்சியினர் சொந்த காசில் கூட்டிய கூட்டம் பிரேமலதாவை மகிழ்ச்சி கடலில் திக்கு முக்காட செய்தது. இன்னும் சொல்லப் போனால் அவரே இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்த்து இருக்க மாட்டார். கூடிய கூட்டம் விஜயகாந்துக்கு என்பதை உணர்ந்த பிரேமலதா வார்த்தைக்கு வார்த்தை விஜயகாந்தின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தார். மணலுார்பேட்டையில் உணர்ச்சி பொங்கிய பேச்சில் உற்சாகமடைந்த தொண்டர்கள், 'இங்கு நீங்கள் போட்டியிட வேண்டும்' என குரல் எழுப்பினர். இதற்கு பிரேமலதா, ரிஷிவந்தியத்தில் நான் நிற்கணுமா? உங்கள் அனைவரின் ஆசை அதுவாக இருந்தால், விஜயகாந்தின் ஆசிர்வாதம், கடவுளின் அனுக்கிரகம் அதுவாக இருந்தால், அந்த பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்தால் கண்டிப்பாக நடக்கும் என கூறினார். தொகுதியில் முக்கிய மூன்று மையப்பகுதிகளில் பிரேமலதாவிற்கு கூடிய கூட்டம் இங்கு நிற்கலாம் என்ற ஆர்வத்தை அதிகப்படுத்தியதாகவே தெரிகிறது. பிரேமலதா கூட்டத்திற்கு கூடிய கூட்டமும், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை மறைமுகமாக வெளிப்படுத்திய விதத்தையும் கண்ட திராவிட கட்சிகள் சற்று கலங்கி போய் உள்ளனர். தே.மு.தி.க., இரண்டு திராவிட கட்சிகளில் ஏதாவது ஒன்றில் கூட்டணி அமைப்பது உறுதி என்ற நிலையில், தொகுதி கைநழுவி போய்விடுமோ என்ற அச்சத்தில் போட்டி களத்தில் இருக்கும் திராவிட கட்சிகளின் கனவு வேட்பாளர்கள் சற்று கலக்கமடைந்துள்ளனர். ஒரு பக்கம் கூட்டணியில் பிரேமலதா தொகுதியை பெற்று விட்டால், இங்கு நிற்பது உறுதி. எதிரணியில் போட்டி களத்தில் பலமான வேட்பாளரை சந்திக்க வேண்டுமே என்ற கவலையும் திராவிட கட்சிகளை தொற்றிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் பிரேமலதாவின் ரிஷிவந்தியம் விஜயம் திராவிட கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.