திருவள்ளுவர் தினத்தில் இயங்கிய தனியார் பாருக்கு சீல்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் கடந்த 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி மூட கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதை மீறி கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள தனியார் 'பார்' செயல்படுவதாக புகார் எழுந்தது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் நடத்திய சோதனையில், பொரசக்குறிச்சி சின்னமணி,40; என்பவர் மதுபாட்டில் விற்றது தெரிந்தது. இதையடுத்து சின்னமணி மற்றும் 'பார்' உரிமையாளர் அண்ணா நகர் முத்துசாமி மகன் வீரமணி ஆகியோர் மீது வழக்கு பதிந்து, சின்னமணியை கைது செய்தனர். 22 மதுபாட்டில்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலையில், அரசு உத்தரவை மீறி, இயங்கிய தனியார் பாரை கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன் தலைமையில் ஊழியர்கள் நேற்று பூட்டி 'சீல்' வைத்தனர். மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் எழிலரசி, கலால் ஆய்வாளர் குப்புசாமி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.