உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோமுகி அணையில் துார் வாரப்படாததால் நீரை தேக்குவதில் சிக்கல்! ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற விவசாயிகள் கோரிக்கை

கோமுகி அணையில் துார் வாரப்படாததால் நீரை தேக்குவதில் சிக்கல்! ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற விவசாயிகள் கோரிக்கை

கச்சிராயபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி கிராம மக்கள் விவசாயத்தை முக்கிய வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ளனர். இங்கு நெல், கரும்பு, மக்காச்சோளம், மரவள்ளி, பருத்தி, மஞ்சள், வாழை போன்ற பல்வேறு பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக கல்வராயன் மலையின் அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை உள்ளது. மொத்தம்,13 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அணையின் கொள்ளளவு உயரம் 46 அடியாக அமைந்துள்ளது.இதில் 3.6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நீர் பிடிப்பு பகுதியாக உள்ளது. கல்வராயன் மலை பகுதியில், 290 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பெய்யும் மழை நீர் முழுதும் பொட்டியம், கல்படை, பரங்கிநத்தம் ஆகிய மூன்று ஆறுகளின் வழியாக கோமுகி அணையில் சேகரமாகிறது. கோமுகி ஆற்றில் வடக்கனந்தல் முதல் வேளாக்குறிச்சி வரை உள்ள 12 அணைக்கட்டுகளின் மூலம் 43 ஏரிகள் நீராதாரம் பெறுகின்றன. அணையின் பழைய மற்றும் புதிய பாசனத்தின் மூலம், 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள, 10 ஆயிரத்து 860 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், இந்த அணை,50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு

கோமுகி அணையிலிருந்து ஆண்டு தோறும் அக்டோபர் 1ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் வரை, 150 நாட்கள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் கச்சிராயபாளையம் சுற்றியுள்ள பகுதியில் சம்பா சாகுபடியில், 6 மாத பயிரான பொன்னி நெல் சாகுபடி அதிகளவில் நடைபெற்றது. இந்நிலையில்,கோமுகி அணை கட்டியதிலிருந்து துார் வாரப்படாமல் உள்ளதால் அணை முழுதும் மண் மேடாக மாறியுள்ளது. மேலும் தனி நபர்கள் அணையில் பல ஏக்கர் பரப்பளவை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். பொதுபணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் அணையில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.தற்போது அணையின் நீர் பிடிப்பு பகுதி நாளுக்கு நாள் சுருங்கி வருவதாலும், துார் வாராமல் அணை மண் மேடாக மாறி உள்ளதாலும் நீர் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

விவசாயிகள் பாதிப்பு

மழைக்காலங்களில் ஓரிரு நாட்களிலேயே அணையின் நீர் மட்டம் உயர்ந்து விடுவதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுதும் கோமுகி ஆறு வழியாக வெளியேற்ற வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கடந்த சில ஆண்டுகளாக கோமுகி அணையில் அரசு அனுமதியுடன் வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை முறையாக எடுக்காமல் அங்கும் இங்குமாக சில இடங்களில் மட்டும் ஆழமாக பள்ளம் தோண்டி மண் எடுத்து வருகின்றனர்.ஆனால் அணைக்கு எந்த பயனும் இல்லாமல் உள்ளது.இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கோமுகி அணையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி அணையை துார் வார அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி